திருநெல்வேலி மாவட்டம் - சங்கரநயினார் கோயிலில் திரு. ஞானமுத்தனார் திருவாட்டி பரிபூரணம்
அம்மையார் ஆகிய வாழ்விணைர்க்கு கடைக்குட்டிப் (பத்தாவது) பிள்ளையாகவும் நான்காம் மகனாகவும்
திரு. தேவநேயனார் 07.02.1902 அன்று பிறந்தார்.
திரு. தேவநேயனாரின் ஐந்தாம் அகவையில் அவர்தம் தந்தை திரு. ஞானமுத்தனார் இயற்கை யெய்தினார்.
பின்னர் அன்னை திருவாட்டி பரிபூரணம் அம்மையாரும் மறைவுற்றார். பெற்றோரை இழந்த திரு.
தேவநேயனார், அவர்தம் தமக்கையார் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையாரின் அரவணைப்பில்
வளர்ந்தார். தொடக்கக் கல்விக்குப் பிறகு சீயோன்மலை எனப்படும் முறம்பில் சமயத் தொண்டராக
(Missionary) இருந்து கல்விப்பணியாற்றி வந்த ‘யங்’ என்னும் துரைமகனாரிடம் கடனுதவி பெற்றுப்
பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (பதினோராம்
வகுப்பு) வரை பயின்று தேர்ச்சி பெற்றார்.
பள்ளியிறுதி வகுப்பு தேறிய தேவநேயனார் முதலாவதாகச் சீயோன்மலை நடுநிலைப்பள்ளியில் ஆறாம்
வகுப்பு ஆசிரியராகத் தமது பதினேழாம் அகவையில் பணி மேற்கொண்டார்.
ஆம்பூருக்குச் சென்று திரு. தேவநேயனார் தாம் பயின்ற மிசௌரி நல்லஞ்சல் உலுத்திரன் நடுநிலைப்பள்ளியில்
தமிழாசிரியராகப் பணியாற்றினார். பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழிய உயர்நிலைப்பள்ளி
தமிழாசிரியர் பண்டித மாசிலாமணியார், திரு. தேவநேயனாரின் பாடல் புனையும் ஆர்வத்தையும்
ஆற்றலையும் அறிந்திருந்தமையால், அவர் பெயரைத் தேவநேசக் கவிவாணன் என்று சிறப்புறக் குறிப்பிட்டார்.
கவிவாணன் என்னும் சிறப்புப் பெயரையே பின்னாளில் பாவாணன் என்று தமிழாக்கம் செய்து கொண்டார்
திரு. தேவநேயனார். இச்சிறப்புப் பெயரே ‘பாவாணர்’ என்று இந்நாள்வரை பெருமையுடன் வழங்கப்
பெற்று வருகிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி இரண்டாம் வகுப்பில் வெற்றி பெற்றார்
பாவாணர். அவ்வாண்டு அத்தேர்வெழுதியவர்களுள் பாவாணர் ஒருவரே தேர்ச்சி பெற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது. சென்னை, திருவல்லிக்கேணிக் ‘கெல்லட்டு’ உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியாற்றினார்.
சென்னை, கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பாவாணர்
எழுதிய ‘சிறுவர் பாடல் திரட்டு நூல்’ இந்தியக் கிறித்துவ இலக்கியக் கழகத்தால் வெளியிடப்
பெற்றது.
திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
அவ்வாண்டு அத்தேர்வு எழுதியவர்களுள் பாவாணர் ஒருவரே தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளியில் ஈராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
மன்னார்குடி ‘பின்லே’ கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக ஐந்தாண்டு
பணி புரிந்தார். பாவாணர் முதல் மனைவி திருவாட்டி எசுத்தர் அம்மையார் இயற்கை யெய்தினார்.
பாவாணர் எழுதிய ‘துவாரகை மன்னன்’ என்னும் நூல் மன்னார்குடியில் ‘சண்முகா’ பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டது.
பாவாணர் தமது அக்கை பாக்கியத்தாய் அம்மையாரின் மகள் திருவாட்டி நேசமணி அம்மையாரை மணந்தார்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக இதழான ‘செந்தமிழ்ச் செல்வி’யில் பாவாணரின் மொழியாராய்ச்சிக்
(Comparative Philology) கட்டுரை முதல் முறையாக வெளிவந்தது. (செ.செ. 9:275) திருவாட்டி
நேசமணி அம்மையார் முதல் ஆண் மகவு ஈன்றார். மகனுக்குப் பாவாணர் சூட்டிய பெயர் ‘நச்சினார்க்கினிய
நம்பி’
பாவாணரின் ‘கிறித்துவக் கீர்த்தனைகள்’ என்னும் பாடற் திரட்டு நூல் வெளிவந்தது.
திருச்சிப் புத்தூர் ஈபர் கண்காணியார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாண்டுக் காலம் தலைமைத்
தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பாவாணரின் சொந்த வெளியீடான ‘கட்டுரை வரைவியல்’ என்னும் நூல் வெளிவந்தது.
கட்டாய இந்திக் கல்விக்குப் பாவாணரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘செந்தமிழ்க் காஞ்சி’
என்னும் இசைப்பா நூல் வெளியிடப் பெற்றது.
பாவாணரின் நான்காவது மகனான ‘பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்’ மறைவு (24-12-1939)
பாவாணரின் சொந்த வெளியீடான ‘ஒப்பியன் மொழிநூல்’ வெளிவந்தது. இந்நூல் பேராயக் கட்சிப்
பெருமகனும், சிறந்த அறுவையாளருமான ‘பண்டகர் மல்லையா’ அவர்களுக்குப் படையலாக்கப்பட்டது.
‘இயற்றமிழ் இலக்கணம்’ எனும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்
பெற்றது.
‘தமிழர் சரித்திரச் சுருக்கம்’ என்னும் நூல் வந்தது. வெளியீடு : ‘இளைஞர் மன்றம்’
சென்னை மன்னடி முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிற் பாவாணர் தமிழாசிரியராகப் பணி
மேற்கொண்டார். அப்பள்ளியிற் பாவாணரோடு பணியாற்றியவர் முனைவர் மா. அரசமாணிக்கனார். சென்னையில்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகச் சார்பில் பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடைபெற்ற
‘முதலாம் தமிழுணர்ச்சி மாநாட்டில்’ பாவாணர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். ‘சுட்டு விளக்கம்
அல்லது அடிப்படை வேர்ச் சொல் ஐந்து’ என்னும் நூல் (ஆசிரியரின் சொந்த வெளியீடு) வெளிவந்தது.
சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக அமர்த்தம் பெற்று, பின்னர் பேராசிரியரானார்.
(சேலம் கல்லூரிப் பணி பன்னிராண்டுக் காலம் தொடர்ந்தது.) ஆசிரியரின் சொந்த வெளீயிடான
‘திராவிடத் தாய்’ என்னும் நூல் வெளிவந்தது.
பாவாணரின் ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ என்னும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழக வெளியீடாக வெளிவந்தது.
பாவாணரின் ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’ (முதற்பாகம்) வெளிவந்தது. வெளியீடு : சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்.
‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’ (இரண்டாம் பாகம்) வெளிவந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழக வெளியீடு.
முதுகலை (M.A.) தேர்வெழுதிப் பட்டம் பெற்றார். ‘பழந்தமிழாட்சி’ நூல் வெளிவந்தது. வெளியீடு
: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
‘முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்’ என்னும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழக வெளியீடாக வெளிவந்தது.
‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’ என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு : சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம்.
‘A Critical Survey of India’ என்னும் ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இது ஆசிரியரின்
சொந்த வெளியீடு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் ‘திராவிட மொழியாராய்ச்சித் துறை’ வாசகராக (Reader) அமர்த்தப்
பெற்றார். ‘தமிழர் திருமணம்’ என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு : ஆசிரியரின் சொந்த
வெளியீடு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மொழியியல் துறைத் தொடக்கக் கூட்டம் திரு. சுனீதிகுமார்
சட்டர்சி அவர்கள் தலைமையில் நடைபெற்து. அக்கூட்டத்திற் பாவாணர்க்கும் அவர்க்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டது. தேராடூனில் ஒன்றரை மாதம் நடைபெற்ற கோடைக்கால மொழியியல் வகுப்பில்
பாவாணர் பங்கேற்றார் (மே - சூன் 1957). பாவாணரின் மூத்த மகன் நச்சினார்க்கினிய நம்பியின்
திருமணம் நடைபெற்றது (19-8-1957). பாவாணரின் அருந்தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் தந்தை
பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் தலைமையில், சேலம் தமிழ்ப் பேரவைச் சார்பில் ‘திராவிட
மொழிநூல் ஞாயிறு’ என்னும் சிறப்புப் பெயரும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. தில்லியில்
மூன்று நாள் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக் கலை மாநாட்டில் பாவாணர் பங்கேற்றார்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ‘தென்மொழி’ என்னும் இதழ்
பாவலரேறு பெருஞ்சித்திரன் அவர்களால் தொடங்கப் பெற்றது.
ஆட்சித் துறைக் கலைச் சொல்லாக்கங் குறித்துப் பாராட்டித் தமிழ் நாட்டரசுச் சார்பில்
பாவாணர்க்குச் சிறப்புப் பட்டயம் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பணி தொடர முடியாத நிலையில் தன்மானத்துடன் அங்கிருந்து
வெளியேறினார் (21-9-1961). ‘சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியின் சீர்கேடுகள்’ (The
manifold defects of the Madras University Tamil Lexicon) என்னும் சிறிய நூல் வெளிவந்தது
- சொந்த வெளியீடு.
பாவாணரின் ஆருயிர்த் துணைவியாரான திருவாட்டி நேசமணி அம்மையார் நோய்வாய்ப்பட்டு இயற்கை
யெய்தினார் (27-10-1963). பாவாணர் பெயரைச் சிறப்பாசிரியராகத் தாங்கித் ‘தென்மொழி’ இதழ்
மாதிகையாக (சுவடி : 1, ஓலை : 1) புதுப்பொலிவுடன் வெளியானது. வருவாய் குன்றியும் களைகண்
இன்றியும் பாவாணர் துன்புற்றிருந்த காலத்திற் ‘தென்மொழி’ இதழில் (சுவடி :1, ஓலை : 11)
‘பாவாணர் பொருட் கொடைத் திட்டம்’ பாவலரேறு பெருஞ்சித்திரனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முனைவர் சி. இலக்குவனார் தலைமையிலான ‘மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம்’ பாவாணரின் பணிகளைப்
பாராட்டி, அவர்க்குத் ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
(12-1-1964) ‘என் அண்ணாமலை நகர் வாழ்க்கை’ என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழி இதழில்
(சுவடி : 2, ஓலை : 6) வெளிவரத் தொடங்கியது.
பாவாணரின் தவப்புதல்வி மங்கையர்க்கரசியின் திருமணம் சென்னையில் சிறப்புற நடைபெற்றது.
பாவாணரின் ‘The Primary Classical Language of the World’ என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு
விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் முனைவர் சி. இலக்குவனார் தலைமையில் நடைபெற்றது
(9-4-1966). செங்காட்டுப்பட்டியில் ‘பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு’ சார்பில் தவத்திரு
குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாவாணர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்வமயம்
நூல் வெளியிடுவதற்காக 4001/- உருபாவிற்கான பணமுடிப்பு வழங்கப்பட்டது. ‘பண்டைத் தமிழ
நாகரிகமும் பண்பாடும்’, ‘இசைத் தமிழ்க் கலம்பகம்’ என்னும் நூல்கள் பாவாணரின் துணைவியார்
நேசமணி அம்மையார் நினைவு வெளியீடாக வெளிவந்தன. ஆசிரியரின் சொந்த வெளியீடு.
‘மதுரை எழுத்தாளர் மன்றம்’ சார்பில் பாவாணர்க்கு மணிவிழா கொண்டாடப்பட்டது. 7350/- உருபாவிற்கான
பணமுடிப்பும் வழங்கப்பட்டது. ‘The Language Problem of Tamilnad and its Logical Solution’
என்னும் நூல் வெளிவந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு. ‘தமிழ் வரலாறு’, ‘வடமொழி வரலாறு’
ஆகிய நூல்கள் பாவாணரின் சொந்த வெளியீடாக வெளிவந்தன.
திருச்சியில் பாவாணர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ‘உலகத் தமிழ்க் கழகம்’ தொடங்கப்பட்டது
(6-10-1968). முனைவர் மெ. சுந்தரம் துணைத் தலைவராகவும் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பொதுச் செயலாளராகவும் புலவர் இறைக்குருவனர் துணைப் பொதுச் செயலாளராகவும் புலவர் செந்தமிழ்க்கிழார்
(நா. செல்வராசன்) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘இந்தியால் தமிழ் எவ்வாறு
கெடும்?’, ‘வண்ணனை மொழி நூலின் வழுவியல்’ என்னும் நூல்கள் பாவாணரின் சொந்த வெளியீடாக
வெளிவந்தன.
நீலமலை பெரும்பகல்லாவில் ஏறத்தாழ ஒரு மாதம் பாவாணர் தங்கி மலைவாழ் மக்களின் வழக்காற்றுத்
தமிழ்ச் சொற்களைத் திரட்டினார். அங்குத் தங்குவதற்குத் திரு. நா. இளமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.
பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாடு பறம்புக்குடியில் நடைபெற்றது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார், முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வசு.ப. மாணிக்கம்,
புலவர் குழந்தை முதலானோர் இம்மாநாட்டிற் பங்கேற்றனர். பாவாணரின் சொந்த வெளியீடாகத்
‘திருக்குறள் தமிழ் மரபுரை’ வெளிவந்தது.
பாவாணரின் சொல்லாய்வு நலம் பாராட்டிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அவர்க்கு
வெள்ளித் தட்டம் வழங்கியும் பட்டுப் போர்த்தியும் சிறப்பித்தது. சிறப்பாசிரியராகப்
பாவாணர் பெயர் தாங்கி உலகத் தமிழ்க் கழக மாதிகையாக ‘முதன்மொழி’ என்னும் இதழ் வெளியானது.
நெய்வேலியில் ‘பாவாணர் தமிழ்க் குடும்பம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. (2-8-1970)
அமைப்பின் நிறுவனர் : அன்புவாணன் வெற்றிச்செல்வி.
பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது பொது மாநாடு மதுரையில் இருநாள்
நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்,
பேரா. கோ. நிலவழகனார், முனைவர் க.ப. அறவாணன் முதலானோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
பறம்பு மலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில், பாவாணர்
‘செந்தமிழ் ஞாயிறு’ எனப் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். தென்மொழியின் ‘செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்’ வகுக்கப் பெற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திட்ட
உறுப்பினர் இருநூறு பேர் ஒவ்வொருவரும் மாதந்தேறும் உரு. 10/- பாவாணர்க்கு அனுப்பி வைக்கும்படித்
தீர்மானிக்கப் பெற்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வால்பாறையில் பத்து நாட்கள்
தங்கி, மலைவாணர் வழக்காற்றுச் சொற்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில், தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கம் தஞ்சையில்
பெரும்புலவர் நீ. கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாவாணர் பேருரையாற்றினார்.
‘தமிழர் வரலாறு’, ‘தமிழர் மதம்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. இவை பாவாணரின் சொந்த வெளியீடு.
‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ என்னும் நூல் வெளிவந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக
வெளியீடு.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின்’
இயக்குநராகக் கலைஞர் அருட்செல்வனார் (கருணாநிதியார்) அவர்களால் பணி அமர்த்தம் செய்யப்பட்டார்
பாவாணர். (8-5-1974)
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தலைமையில்
நடத்திய ‘முத்தமிழ் மாநாட்டில்’ பாவாணர் அவர்கள் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார்
அவர்களால் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டார். நெய்வேலிப் பாவாணர் தமிழ்க் குடும்பத்தினர்
சென்னை வந்து, பாவாணருடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர் (16-10-1975).
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய ‘மறைமலை அடிகளார் நூற்றாண்டு விழா’வில்
பாவாணர் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டார்.
‘மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை’ என்னும் நூல் வெளிவந்தது. பாவாணரின் சொந்த
வெளியீடான இந்நூல் சொந்த அச்சகமான ‘தென்குமரி’ அச்சகத்தில் அதன் உரிமையாளரும் ஆசிரியருமான
தே. மணியால் அச்சிடப்பட்டது.
தமிழக அரசு பாவாணர்க்குச் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
விழாவிற்கு அன்றைய முதலமைச்சர் திரு. ம.கோ. அழகுமதியர் (M.G.R.) அவர்கள் தலைமை தாங்கிப்
பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். ‘தமிழிலக்கிய வரலாறு’ என்னும் பாவாணரின்
நூல் வெளிவந்தது. சொந்த வெளியீடாகச் சொந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. சென்னையில்
உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப்
புலவர் நக்கீரனார் தலைமை தாங்கினார்.
மதுரை ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் (1981) பாவாணர் பங்கேற்று ‘மாந்தன் தோற்றமும்
தமிழர் மரபும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். “An Epitome of the Lemurian Language
and its Ramifications” என்னும் நூலின் சுருக்கம் உருட்டச்சில் அச்சிடப்பட்டு, மதுரை
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் வழங்கப்பட்டது. தி.பி. 2012 சுறவம் 2-ஆம் பக்கல் (16-1-1981)
மாரடைப்பினால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நள்ளிரவு 1-00 மணியளவில்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் விண்ணுலகு யெய்தினார்.